ஊர்த்துவ முனிவரின் சாபத்தால் நிருத்துவர் என்பவரது மனைவி வேதிகையின் கரு கலையாமல் காத்து, அம்பிகை சுகப்பிரசவம் செய்து வைத்த தலமாதலால் 'கருகாவூர்' என்று பெயர் பெற்றது.
மூலவர் 'முல்லைவனேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், மெலிதான, சற்று உயர்ந்த பாணத்துடன் காட்சி அளிக்கின்றார். சுவாமி மீது முல்லைக் கொடி படர்ந்த அடையாளது உள்ளது. சுயம்பு மூர்த்தியாதலால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. வெளியே தனி சன்னதியில் அம்பாள் 'கர்ப்பரட்சாம்பிகை' என்னும் திருநாமத்துடன் அழகாகக் தரிசனம் தருகின்றாள். இக்கோயிலில் சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி அதாவது கிழக்கு நோக்கி தரிசனம் அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் நடைபெற்று நீண்ட காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், கரு உண்டாகி தங்காமல் இருப்பவர்கள் போன்றோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு அம்பிகையின் திருப்பாதத்தில் வைத்துத் தரப்படும் நெய்யை 48 நாட்கள் தொடர்ந்து இரவில் சாப்பிட்டு வந்தால் கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் சுகப் பிரசவம் நடைபெறும்.
திருமணம் ஆகாத பெண்களும் இங்கு அம்பாள் சன்னதியில் வாசல்படியை நெய்யால் மெழுகி கோலமிட்டு, அர்ச்சனை செய்து வழிபட்டால் அவர்களுக்கு திருமணம் நடந்து, குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை பிறந்தால் இங்கு வந்து தொட்டில் கட்டி துலாபாரம் செய்கின்றனர்.
மேலும் சரும நோய் உள்ளவர்கள், சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்துவதாக வேண்டிக் கொண்டால் சரும நோய் குணமாகும். இது இன்றளவும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
காவிரிக் கரையில் உள்ள பஞ்ச ஆரண்யத் (ஆரண்யம் - வனம்) தலங்களுள் இத்தலமும் ஒன்று. கருகாவூர் - முல்லை வனம், அவளிவநல்லூர் - பாதிரி வனம், அருதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - வன்னி வனம், இரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம், கொள்ளம்புதூர் - வில்வ வனம். இந்த ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் வழிபடுவது சிறப்பு. இவை இன்றும் வழக்கத்தில் உள்ளன.
இக்கோயிலில் உள்ள கற்பக விநாயகரும், நந்தி தேவரும், விடங்க மூர்த்திகள். அதாவது உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக உருவானவை. ஆகவே, இத்தலத்தில் விநாயகர், சுவாமி, நந்தி மூவரும் சுயம்பு மூர்த்திகளாக இருப்பது சிறப்பு. பிரம்மா, சந்திரன், கௌதம முனிவர், காமதேனு ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
வைகாசி விசாகத்தையொட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாகக் நடைபெறுகிறது. இது தவிர ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி, கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடிப்பூரத் திருவிழாவின் 10ம் நாளன்று காவிரி ஆற்றில் தீர்த்தவாரி திருவிழா விசேஷம்.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|